Abstract:
பொதுச் சேவையினை வழங்கும் நிறுவனங்கள் மக்களுக்கான வினைத்திறனானதும் தரமானதுமான பாதுகாப்பான தகவல்களை வழங்குவது அவசியமாகும். மரபு ரீதியான பொதுத்துறையில் காணப்பட்ட குறைப்பாடுகள் காரணமாக அதனை நிவர்த்திச் செய்யும் வகையில் புதிய பொது முகாமைத்துவ அணுகுமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக தகவல் தொழில்நுட்பத்தின் பலன்களை உணர்ந்து இலத்திரனியல் அரசாங்கம் சேவைகளை வழங்கும் போது மரபு ரீதியான பொதுச்சேவையிலுள்ள குறைப்பாடுகளை நிவர்த்திக்க முடியும் என்ற எண்ணப்பாடு தோற்றம் பெற்றது. பொதுநிர்வாக ஒழுங்கமைப்பின் உயர்மட்ட இடைமட்ட கீழ்மட்ட நிர்வாக அலகுகளின் திறன், செயலூக்கம் போன்றவற்றைத் துரிதப்படுத்தவும், பிரசைகளுக்கு வழங்கப்படும் சேவைகளை மேலும் அதிகரிக்கவும், நிர்வாகச் செலவினைக் குறைக்கவும் இதற்கேற்ப புதிய இலத்திரனியல் நிர்வாக ஒழுங்கமைப்பிற்கும், கட்டமைப்பிற்கும் தேவையான வன்பொருட்கள், மென்பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு அதனூடாக மக்கள் நிர்வகிக்கப்படும் கலாசாரம் வளர்ந்து வருகிறது. உலகிலுள்ள பல நாடுகள் இலத்திரனியல் ஆளுகை முறையை ஏற்றுக் கொண்டுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் பெற்றுள்ள 192 நாடுகளில் 179 நாடுகள் இலத்திரனியல் ஆளுகையினை அபிவிருத்தி செய்வதற்குக் கொள்கைகளையும், தந்திரோபாயங்களையும் வகுத்துள்ளன. இத்தகைய இலத்திரனியல் அரசாங்கம் இலங்கையில் பொதுத்துறையில் பொதுச்சேவை வழங்குவதில் எவ்வாறு அதனது வகிப்பாகத்தை செலுத்துகிறது என்பதை அறிவதற்காக பதுளை மாவட்ட செயலகத்தை ஆய்வுப்பிரதேசமாக தெரிவுச்செய்து ஆய்வுச்செய்யப்பட்டது. இதற்காக இலத்திரனியல் அரசாங்கத்தின் பிரதிபலிப்பானது சர்வதேச தேசிய மட்டத்தில் எவ்வாறு உள்ளது என்பது இனங்காணப்பட்டது. அத்தோடு இலத்திரனியல் அரசாங்கத்தில் முக்கியம் பெறுகின்ற ஐந்து மாதிரிகளை தெரிவுச்செய்து அதனை பதுளை மாவட்ட செயலகத்தின் இலத்திரனியல் அரசாங்கச் சேவையில் எவ்வாறு காணப்படுகின்றது என்பது பற்றியும் அதனது பொருத்தப்பாடு குறித்தும் ஆராய்கின்றது. அத்தோடு பதுளை மாவட்ட செயலகத்தில் பொதுச்சேவை வழங்கலில் இலத்திரனியல் அரசாங்க சேவைகளை கண்டறிந்து அதிலுள்ள சவால்களையும் வாய்ப்புக்களையும் இனங்காண்பதற்காக நிர்வாக அதிகாரிகளையும் பயனாளிகளையும் மாதிரி எடுப்பு முறைகளை பயன்படுத்தி 30 நபர்களிடம் நேர்காணல் மூலம் தகவல் பெறப்பட்டு ஆறு மாறிகளை கொண்டு தகவல்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு எண்ரீதியான தகவல்களையும் பண்பு ரீதியான தகவல்களையும் கொண்டு உருவாக்கப்பட்ட கலப்பு பகுப்பாய்வு ஆய்வாகும். இவ்வாறு இவ்வாய்வானது இலங்கையில் பொதுச்சேவை வழங்கலில் இலத்திரனியல் அரசாங்கத்தில் வகிப்பாகத்தின் அவசியத்தையும் அதில் காணப்படுகின்ற சவாலானத்தன்மையும் ஆர்யும் விதமாக இவ் ஆய்வு அமைகின்றது.