Abstract:
சமூக நல்லுறவென்பது வேற்றுமைகளுக்கு மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்துகின்ற ஒரு விடயமாகும். சமூகத்தைப் பொறுத்தவரை நல்லுறவுடன் கூடியதான சூழல் அவசியமாகின்றது. அத்தகைய சூழலை ஏற்படுத்துவதற்கு அனைவரும் சமூக நல்லுறவுடன் வாழவேண்டும். இவ்வாறான சமூக நல்லுறவினை மேம்படுத்துவதில் உந்து சக்தியாக அமைந்திருப்பவை சமய விழுமியங்களாகும். சமய விழுமியங்கள் அனைவராலும் இலகுவாகப் பின்பற்றப்படக்கூடியதும் பின்பற்றத் தவறுகின்றதுமான விழுமியங்களாகவே அமைந்துள்ளன. இவ்வாறாக காணப்படும் விழுமியங்களை மனிதன் தனது வாழ்க்கையில் கடைபிடித்து ஒழுகுவானாக இருந்தால் சமூக நல்லுறவானது மேம்படும்.
இந்து பௌத்த சமயங்கள் தத்தம் சமய விழுமியங்கள் ஊடாக சமூக நல்லுறவினை எவ்வாறு மேம்படுத்துகின்றன என்பது தொடர்பில் எத்தகைய ஒற்றுமைப் பாங்கினைக் கொண்டுள்ளன என்பதனைக் கண்டு கொள்வதே இவ் ஆய்வினுடைய நோக்கமாகும். இந்த நோக்கத்தை அடைவதற்காக பண்புசார் ஆராய்ச்சியினை மேற்கொண்டுள்ளேன். இந்தப் பண்புசார் ஆராய்ச்சியானது ஒரு விபரண ஆய்வாக இருப்பதனால் தரவுகள் இரண்டாம் நிலைத் தரவுகளாகவே உள்ளன.
மேலும் இவ்வாய்விற்கு நூல்கள், சஞ்சிகைகள், கட்டுரைகள் முதலியன ஆய்விற்குரிய தரவு சேகரிப்பு முறைகளாக உள்ளதுடன் மூன்றாம் நிலைத் தரவுகளான இணையவழித் தரவு திரட்டல் முறையின் மூலமும் கிடைக்கப்பெற்ற தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இவ்வாய்வு அமையப் பெற்றுள்ளதுடன் இந்த ஆராய்ச்சி தரவுகளின் அடிப்படையில் ஒப்பீட்டு ரீதியாக இந்த எண்ணக்கரு பகுப்பாய்வு செய்யப்படுகின்றது. இவ் ஆய்விலேயே கூறப்பட்டுள்ள விடயங்களாக சமூக நல்லுறவு மற்றும் விழுமியங்கள் என்பதுடன் இந்து மற்றும் பௌத்த சமயங்களில் காணப்படுகின்ற சமய விழுமியங்கள் சமூக நல்லுறவினை மேம்படுத்துவதற்கு வலுச்சேர்ப்பதாய் அமையப் பெற்றுள்ளது